ஈமுகோழி நிறுவன அதிபர் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
ஈமுகோழி நிறுவன அதிபர் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
கோவை
ரூ.82 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஈமுகோழி அதிபர் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஈமுகோழி நிறுவனம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சென்னிமலையை சேர்ந்தவர் எம்.எஸ்.குமார் (வயது 49). திருப்பூர் மாவட்டம் ராமுகாலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (51). இவர்கள் இருவரும் கடந்த 2011-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஓம்சக்தி ஈமு பார்ம் என்ற பெயரில் ஈமுகோழி நிறுவனம் நடத்தி வந்தனர்.
மற்றொரு பண்ணை திண்டுக்கல் மாவட்டம் தண்ணீர்பந்தம்பட்டி வேடச்சந்தூரில் இயங்கி வந்தது. இங்கு முதலீடு செய்தால் மாதந்தோறும் கூடுதல் வட்டியும், ஈமுகோழிகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் 3 வருடத்துக்குள் பணம் முதலீடு செய்த பணமும் திரும்ப வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
கோர்ட்டில் வழக்கு
இதை நம்பி ஏராளமானவர்கள் அந்த இரு நிறுவனங்களிலும் பணத்தை முதலீடு செய்தனர். அதில் திண்டுக்கல்லில் உள்ள நிறுவனத்தில் 25 பேர்களிடம் ரூ.58 லட்சத்து 51 ஆயிரத்தை வசூலித்து திரும்ப வழங்காமல் நிறுவனத்தை பூட்டிவிட்டு மோசடி செய்து தலைமறைவானார்கள். இது குறித்த புகாரின்பேரில் திண்டுக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
அதேபோன்று தாராபுரத்தில் செயல்பட்ட மற்றொரு நிறுவனத்தில் 14 பேரிடம் ரூ.23 லட்சத்து 83 ஆயிரத்து 500 மோசடி செய்யப்பட்டது. இது குறித்த புகாரின்பேரில் திண்டுக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கிலும் எம்.எஸ்.குமாரையும், கார்த்திகேயனையும் கைது செய்தனர். மேலும் இது தொடர்பான 2 வழக்குகளும் கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது.
தலா 10 ஆண்டு சிறை
இந்த வழக்குகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக குற்றம் சாட்டப்பட்ட 2 பேரும் கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜரானார்கள். அதன்படி 2 பேருக்கும் ஒரு வழக்கில் 10 ஆண்டு சிறையும், ரூ.27 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும், அதில் ரூ.27 லட்சத்தை பிரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் நீதிபதி ரவி உத்தரவிட்டார்.
அதுபோன்று மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எம்.எஸ்.குமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறையும், ரூ.27 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும், அதில் ரூ.27 லட்சத்தை பிரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் 2 வழக்குகளிலும் தலா 10 ஆண்டு வழங்கப்பட்ட தண்டனையை 2 பேரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இதில் அரசு தரப்பில் வக்கீல் மாணிக்கராஜ் ஆஜராகி வாதாடினார்.