பாலக்கோடு அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பாலக்கோடு அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே திம்மம்பட்டி கிராமத்தில் உள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை பின்புறம் உள்ள வளாகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சர்க்கரை ஆலை குடியிருப்பு வழியாகவும், எல்லூகான்கொட்டாய் கிராம மண் சாலை வழியாகவும் மாணவர்கள் கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், எள்ளுகான் கொட்டாய் வழியாக செல்லும் மண் சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் சேறும், சகதியுமாக உள்ளது.
இதனால் சர்க்கரை ஆலை குடியிருப்பு வழியாக மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல முற்பட்டபோது, ஆலை நிர்வாகம் மாணவர்களை தடுத்தது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து 2 சாலைகளையும் பயன்படுத்த முடியாத நிலையில் மாணவர்கள் ஆத்திரமடைந்து சர்க்கரை ஆலை நுழைவு வாயில் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன், தாசில்தார் அசோக்குமார் ஆகியோர் அங்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.