ஈச்சம்பாடி அணையின் வலதுபுற கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
ஈச்சம்பாடி அணையின் வலதுபுற கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
தர்மபுரி:
ஈச்சம்பாடி அணையின் வலதுபுற கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
தூர்வார வேண்டும்
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் சித்ரா விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லாகான், வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-
ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளில் உள்ள வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும். விதை பண்ணைகளுக்கு தரமான நெல்லை தொடக்கத்திலேயே உறுதி செய்து வாங்க வேண்டும். ஈச்சம்பாடி அணையின் வலதுபுற கால்வாயில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதர் மூடி தண்ணீர் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எனவே இந்த கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சீரமைக்க வேண்டும். அதன்மூலம் கடைமடை பகுதி உள்ளிட்ட 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற மழைக்காலம் தொடங்குவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரும்பு அரவை பணி
வாணியாறு அணையின் வலதுபுற கால்வாயில் முன்பகுதியில் இருப்பவர்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது. கடைமடை பகுதிவரை பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தூள் செட்டி ஏரி, அளியாளம்- புலிக்கரை பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணியை விரைவாக தொடங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் மலர் சாகுபடி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதால் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.
கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி பேசும் போது, ‘இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ள கோரிக்கைகளை பிரச்சினையாக பார்க்காமல் தீர்வு காண்பதற்கு தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதி அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும். இனிமேல் அத்தகைய குறைகள் ஏற்படாத வகையில் தீர்வு காண வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் ஏரிகள், நீர்நிலைகள் மழைக்காலம் தொடங்குவதற்கு முன் தூர்வார படவேண்டும். ஏரிகளை தூர்வாரும் போது ஏரிக்கான நீர்வரத்து கால்வாயையும் சேர்த்து தூர்வார வேண்டும். அப்போதுதான் அந்த திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும்’என்றார்.
கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் இளங்கோவன், தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்தாஸ் சவுமியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.