ஓசூர் அருகே பரபரப்பு: பீர்பாட்டிலால் தாக்கி தொழிலாளி கொலை-நண்பர்கள் 2 பேர் கைது

ஓசூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பீர்பாட்டிலால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-23 16:52 GMT
மத்திகிரி:
ஓசூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பீர்பாட்டிலால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள அச்செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் பாபு (வயது 45), கூலித்தொழிலாளி. இவருடைய நண்பர்கள் பிரேம்நாத் (35), மகேந்திரன் (30). நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும் ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள மதுபானக்கடைக்கு சென்றனர். அங்கு மதுபாட்டில்களை வாங்கி கொண்டு மத்திகிரி அருகே கர்னூர் பக்கமாக சென்று அவர்கள் மது குடித்தனர். அப்போது போதை தலைக்கேறியதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 
இதில் ஆத்திரம் அடைந்த பிரேம்நாத் அங்கிருந்த பீர்பாட்டிலால் பாபுவின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவரை கொலை செய்ததும், பிரேம்நாத், மகேந்திரன் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பாபு கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்நாத், மற்றும் மகேந்திரனை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. 
மது போதையில் தொழிலாளி பீர்பாட்டிலால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்