கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 4 பெண்கள் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
காதல் திருமணம்
ஓசூர் பாகலூர் சாலை பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் திருப்பதிராஜ். இவருடைய மனைவி பரணி (வயது 34). இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இவர்களின் திருமணத்தை பரணியின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பரணி, விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரணி இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மருத்துவமனை பெண் ஊழியர்
தளி அருகே உள்ள கும்ளா அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவருடைய மகள் உஷா (27). கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நிர்வாக பிரிவில் பணிபுரிந்து வந்தார். உஷாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க விரும்பினர். இதற்காக மாப்பிள்ளை பார்த்திருந்தனர்.
ஆனால் உஷா, வேறு ஒருவரை விரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் காணப்பட்ட உஷா விஷத்தை குடித்தார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூக்குப்போட்டு சாவு
ஓசூர் சிப்காட் சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி பவானி (26). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த பவானி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகி 6 ஆண்டுகளில் பெண் இறந்துள்ளதால் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.
குழந்தை இல்லாததால்...
கல்லாவி அருகே உள்ள கும்மனூரை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மனைவி சினிதா (வயது 19). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் மன வருத்தத்தில் காணப்பட்ட சினிதா, விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகி 2 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இது குறித்து ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர் விசாரணை நடத்தி வருகிறார்.