ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 2 வேட்பாளர்களின் மனுக்களை தள்ளுபடி செய்யக்கோரி தி மு க, அ தி மு க போட்டி புகார்

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 2 வேட்பாளர்களின் மனுக்களை தள்ளுபடி செய்யக்கோரி தி.மு.க., அ.தி.மு.க.வினர் போட்டி போட்டு புகார் தெரிவித்ததோடு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது;

Update: 2021-09-23 16:48 GMT
ரிஷிவந்தியம்

தி.மு.க.வினர் புகார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம்(அக்டோபர்) 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. நேற்று காலை முதல் வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை நடந்தது. அந்த வகையில் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை நடந்தது. 

அப்போது ரிஷிவந்தியம் ஒன்றியம் 15-வது வார்டு(மையனூர் பகுதி) கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அந்தோணியம்மாளின் வேட்பு மனு பரிசீலனையின்போது அதிகாரிகளிடம் தி.மு.க.வினர் புகார் கூறினர். அதாவது வேட்பாளர் அந்தோணியம்மாளுக்கு 2 வீடுகள் உள்ளதாகவும், அதில் ஒரு வீட்டிற்கு மட்டும் வீட்டு வரி செலுத்தியதற்கான ரசீதை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ளார், எனவே அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தி.மு.க.வினர் கூறினர். 

அ.தி.மு.க.வினர் முற்றுகை

இதையடுத்து அ.தி.மு.க.வினர் ஒன்று சேர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதாவது 24-வது வார்டு(ரிஷிவந்தியம்) ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வடிவுக்கரசியின் சொத்து மற்றும் வரிவிதிப்புகளை முறையாக காண்பிக்கவில்லை. எனவே அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர். 

தி.மு.க., அ.தி.மு.க.வினர் போட்டி போட்டு புகார் கூறியதோடு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அலுவலகத்தை விட்டு வெளியேற்றினர். 

சாலை மறியல்

இதற்கிடையில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சில பக்கங்களை காணவில்லை என்றும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஆட்சேபனை இருப்பதாகவும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறுகிறார்கள். 

அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளை கண்டித்து பகண்டை கூட்டுரோட்டில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தண்டபாணி, அருணகிரி, துரைராஜ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திருக்கோவிலூர்-சங்கராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இவர்களுடன் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் போராட்டத்தை கைவிட்டு அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். 





மேலும் செய்திகள்