5 மாணவர்கள், ஒரு ஆசிரியைக்கு கொரோனா

பொள்ளாச்சி அருகே 5 மாணவர்கள், ஒரு ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி மூடப்பட்டது.

Update: 2021-09-23 16:44 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே 5 மாணவர்கள், ஒரு ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி மூடப்பட்டது.

கொரோனா தொற்று

கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் 47 பேரும், 10-ம் வகுப்பில் 40 பேரும் சேர்த்து மொத்தம் 87 மாணவ&மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
 
இதற்கிடையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் 40 பேருக்கும், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 மாணவிகள், 2 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் விடுமுறை விடப்பட்டு, பள்ளி மூடப்பட்டது. பின்னர் அந்த பள்ளிக்கு பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் கண்ணுச்சாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள், கழிப்பிடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஒரே பள்ளியில் 6 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது.

தனிமைப்படுத்தி சிகிச்சை

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:- கொரோனா பரிசோதனை செய்ததில் 3 மாணவிகள், 2 மாணவர்கள், ஒரு ஆசிரியைக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று (நேற்று) முதல் 3 நாட்கள் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. வருகிற திங்கட்கிழமை பள்ளி மீண்டும் திறக்கப்படும். இதற்கிடையில் அந்த ஆசிரியை 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தி உள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக 9-ம் வகுப்பு படிக்கும் 47 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையில் தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியை, மாணவ-மாணவிகளை வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் சுகாதாரத்துறை மூலம் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்