தமிழக அரசு மத்திய கால விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

தமிழக அரசு மத்திய கால விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் என்று மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் தலைமைகுழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். இதையடுத்து மன்னார்குடியில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2021-09-23 16:34 GMT
மன்னார்குடி,

கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி, டெல்லியில் விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த மாதம் 27-ந் தேதி அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், அனைத்து தொழிற்சங்க அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அதிகரித்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரியும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும், கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றம் செய்ய வலியுறுத்தியும் இந்த வேலை நிறுத்த போராட்டம் தமிழகத்தில் நடைபெற உள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டு, மத்திய கால கடன்களை தள்ளுபடி செய்யாமல் விட்டு விட்டது. எனவே தி.மு.க. அரசு இந்த மத்தியகால விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்து மாணவ, மாணவிகள் பலரும் தற்போது தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்கள் இனிவரும் காலங்களில் அரசு பள்ளியிலேயே தொடர்ந்து படிக்கும் வகையில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி, போதுமான ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அ.தி.மு.க. ஆதரித்தது மட்டுமின்றி மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது.

மத்திய மோடி அரசின் பொருளாதார கொள்கை மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான செயல்பாடுகளால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை உணர்ந்து, எதிர்க்கட்சிகள் ஒருமித்து செயல்பட தொடங்கியுள்ளன. அதன் வெளிப்பாடாக கடந்த 20-ந் தேதி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை 19 கட்சிகள் இணைந்து நடத்தியுள்ளன. இந்த ஒற்றுமை வருகின்ற 2024-ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், திருவாரூர் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்