தலை துண்டித்து தொழிலாளி படுகொலை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

திண்டுக்கல் அருகே தலை துண்டித்து தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2021-09-23 15:45 GMT
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன்கோட்டை கிழக்குதெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 38). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் மர்மநபர்கள், இவரது தலையை துண்டித்து படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் தலையை அனுமந்தராயன்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே வீசினர். இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வட்டப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஸ்டீபனின் உடல் கிடந்தது. இந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும், ஸ்டீபனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. எனவே முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
3 தனிப்படைகள்
இதனிடையே கொலை குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டார். அதன் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் மேற்பார்வையில் திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில் சப்&இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, சேக் தாவூத், அழகர்சாமி ஆகியோர் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே ஸ்டீபனை கொலை செய்தவர்கள் கோர்ட்டில் சரண் அடைய போவதாக தகவல் பரவியது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் கோர்ட்டில் சரண் அடையும் முன்பு அவர்களை கைது செய்வதற்காக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 
ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் கொலையாளிகள் சரண் அடையவில்லை. இந்த நிலையில் மதியம் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கோர்ட்டில் கொலையாளிகள் சரண் அடைய போவதாக தகவல் வெளியானது. ஆனால் அங்கும் கொலையாளிகள் சரண் அடையவில்லை. இதனால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். அதேநேரம் கொலையாளிகளை பிடிப்பதற்கு தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். 

மேலும் செய்திகள்