சதீசன், பிஜின் உள்பட 4 பேரிடம் போலீஸ் ஐஜி விசாரணை
சதீசன், பிஜின் உள்பட 4 பேரிடம் போலீஸ் ஐஜி விசாரணை
ஊட்டி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து சதீசன், பிஜின் உள்பட 4 பேரிடம் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நேரடி விசாரணை நடத்தினார்.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்&அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017 ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.
மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், திபு, சதீசன், ஜித்தின்ஜாய், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சயான், விபத்தில் இறந்த கனகராஜ் (ஜெயலலிதா கார் டிரைவர்) அண்ணன் தனபால் மற்றும் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி பதிவு செய்தார்.
கோடநாடு வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்த 4 வார கால அவகாசம் ஊட்டி கோர்ட்டு வழங்கியது. இதையடுத்து அரசு தரப்பு சாட்சிகளிடம் தீவிர விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
விசாரணை
இதைத்தொடர்ந்து கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கனகராஜ் நண்பர்கள் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திபு உள்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் ஊட்டி பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகிய 2 பேரிடம் விசாரணை நடந்தது. இந்த விசாரணை நள்ளிரவு 11.30 மணி வரை மொத்தம் 10 மணி நேரம் நடைபெற்றது.
நேற்று காலை முதல் 2 வது நாளாக சந்தோஷ்சாமி, மனோஜ்சாமியிடம் தொடர்ந்து விசாரணை நடந்தது. போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நேரடியாக கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் மற்றும் தனிப்படையினர் விசாரணை நடத்தி பதிவு செய்தனர்.
கோடநாடு எஸ்டேட் சம்பவத்துக்கு சயான், மனோஜூடன் வந்ததற்கான காரணம் குறித்து துருவித்துருவி விசாரணை நடத்தினர்.
4 பேரிடம் விசாரணை
மேலும் ஜாமீனில் உள்ள சதீசன், பிஜின் ஆகிய 2 பேர் நேற்று மதியம் 12 மணிக்கு ஆஜராகினர். அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடந்தது. 4 பேரிடம் போலீசார் கேள்விகளை எழுப்பி புதிய தகவல்களை பதிவு செய்து கொண்டனர்.
எஸ்டேட் பங்களாவில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து தற்கொலை செய்து கொண்ட தினேஷ் வழக்கு தொடர்பாக சுரேஷிடம் (கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் தனியார் நிறுவன உரிமையாளர்) விசாரணை நடத்தப்பட்டது.
திபு, ஜித்தின்ஜாய் ஆகிய 2 பேரிடம் இன்று (வெள்ளிக்கிழமை) போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.