கண் அறுவை சிகிச்சை செய்த மூதாட்டி சாவு - போலீசில் மகன் புகார்

தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கண் அறுவை சிகிச்சை செய்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தனது தாய்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் போலீசில் புகார் அளித்தார்.

Update: 2021-09-23 11:09 GMT
பெரம்பூர்,

சென்னை எண்ணூர் எஸ்.ஆர்.சாலையை சேர்ந்தவர் ஆண்டாள் (வயது 60). இவர், கண் புரை நீக்க அறுவை சிகிச்சைக்காக தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 20-ந்தேதி அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு திடீரென அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி ஆண்டாள், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.

தனியார் ஆஸ்பத்திரியில் தனது தாய்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த ஆண்டாளின் மகன் தாமோதரன் (47) தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மூதாட்டியின் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்