வீட்டை வாடகைக்கு எடுத்து குத்தகைக்கு விட்டதை தட்டிக்கேட்ட மூதாட்டிக்கு கொலை மிரட்டல்; பா.ஜ.க. பிரமுகர் கைது
சென்னையை அடுத்த பொத்தேரியை சேர்ந்தவர் லீனா பெர்னாண்டஸ் (வயது 55). இவர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
ஆலந்தூர்,
எனது மருமகனுக்கு சொந்தமான வீடு கொட்டிவாக்கத்தில் உள்ளது. மருமகன் வெளிநாட்டில் உள்ளதால் அந்த வீட்டை நான் பராமரித்து வருகிறேன். 2018-ம் ஆண்டு அந்த வீட்டை காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. வழக்கறிஞர் அணி செயலாளர் சிவஅரவிந்தன் என்பவருக்கு ரூ.40 ஆயிரம் மாத வாடகைக்கு விட்டு இருந்தேன். முன்தொகையாக ரூ.2 லட்சம் பெற்றிருந்தேன். 4 மாதங்கள் மட்டும் சிவஅரவிந்தன் வாடகை செலுத்தினார். 11 மாதம் வாடகை நிலுவையில் இருந்ததால் வாடகையை வசூலிக்க வீட்டுக்கு சென்றபோது அங்கு வேறு சிலர் குடி இருந்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, சிவஅரவிந்தன் என்னிடம் வாடகைக்கு எடுத்த வீட்டை வேறு ஒருவருக்கு ரூ.17 லட்சத்துக்கு லீசுக்கு விட்டிருப்பது தெரியவந்தது. இதுபற்றி கேட்டபோது, வீட்டை தர முடியாது என்றதுடன் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இதுபற்றி போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜ.க. பிரமுகரான சிவஅரவிந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.