கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம் - 3 மாதங்களில் 5 டி.எம்.சி. நீர்வரத்து

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 3 மாதங்களில் 5.061 டி.எம்.சி. தண்ணீர் வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Update: 2021-09-23 09:29 GMT
ஊத்துக்கோட்டை,

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின்படி கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கிருஷ்ணா நதி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதாலும், சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. பூண்டி ஏரிக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை குறைக்க வலியுறுத்தி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடந்த வாரம் கடிதம் எழுதினர். அதன்பேரில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிடப்படும் தண்ணீரை வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியிலிருந்து 1,200 கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆந்திராவில் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்புப் பணிகள் ஓரிரு நாட்களில் துவக்க உள்ளதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நேற்று முன்தினம் இரவு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் 18-ந் தேதி முதல் நேற்று முன்தினம் இரவு வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 5.061 டி.எம்.சி. தண்ணீர் வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்