கனமழையில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து விபத்து - 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பினர்.
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிலும் குறிப்பாக பொன்னேரியில் 20 மி. மீட்டர் மழை பதிவாகியது. இந்தநிலையில், பொன்னேரி அடுத்த மெதூர் ஊராட்சியில் அடங்கிய விடதண்டலம் கிராமத்தில் வசித்து வருபவர் முரளி (வயது 40). இவரது மனைவி சுந்தரி (36). இவர்கள் தங்களது குழந்தைகள் இருவருடன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, இடி மின்னலுடன் பெய்த மழையில், வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது வீட்டில் இருந்த 4 பேரும் வெளியே ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து பொன்னேரி வருவாய் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவங்கள் விடதண்டலம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.