போலீசிடம் இருந்து தப்பிக்க ஓடும் ஜீப்பில் இருந்து குதித்து ஓடிய காதல் ஜோடி
ஒசநகர் அருகே சினிமா பாணியில் போலீசிடம் இருந்து தப்பிக்க ஓடும் ஜீப்பில் இருந்து குதித்து காதல் ஜோடி ஓடினர். அவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.;
சிவமொக்கா: ஒசநகர் அருகே சினிமா பாணியில் போலீசிடம் இருந்து தப்பிக்க ஓடும் ஜீப்பில் இருந்து குதித்து காதல் ஜோடி ஓடினர். அவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
காதல் ஜோடி
ஹாசன் மாவட்டம் பேளூரில் முஜாயித்தீன் என்ற வாலிபர் வசித்து வந்தார். அவருக்கும் அப்பகுதியில் வசித்து வந்த ஒரு இளம்பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், அவர்களது காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்து வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
அதனால், அவர்கள் சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.
அதனையடுத்து மாயமான இளம்பெண்ணின் பெற்றோர் போலீசாரிடம் தங்கள் மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த இளம்பெண்ணை தேடி வந்தனர். அதற்காக அந்த இளம்பெண்ணின் போன் நம்பரை பெற்ற போலீசார் அந்த பெண்ணின் செல்போன் மூலம் அவர் எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிய செல்போன் டவர்களை ஆய்வு செய்தனர்.
சிக்கிய காதல் ஜோடி
அதன்படி, சிவமொக்கா மாவட்டம் ரிப்பன்பேட்டை பகுதியில் அந்த எண்ணில் இருந்து அழைப்பு பதிவானதை போலீசார் அறிந்து கடந்த திங்கட்கிழமை அப்பகுதிக்கு விரைந்தனர். அப்பகுதியில் மேற்கொண்ட விசாரணையின் பேரில் காதலர்கள் இருந்த இடத்தை கண்டறிந்து அவர்களை மீட்டு, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
சிவமொக்கா புறநகர் பகுதியில் போலீசாருடன் ஜீப்பில் சென்றபோது, தங்கள் காதலை பிரித்து விடுவார்கள் என்று நினைத்த காதல் ஜோடி தப்பி செல்ல முடிவு செய்தனர். அதனால், ஓடும் ஜீப்பிலிருந்து கீழே குதித்து சாலையில் வேகமாக ஓடினார்கள். அவர்களை போலீசாரும் துரத்தி சென்றனர். தப்பி ஓடிய காதல் ஜோடியை கண்ட பொதுமக்கள் அவர்களை திருடர்கள் என்று நினைத்து தடுத்து நிறுத்தி பிடித்தனர்.
போலீசார் விசாரணை
பொதுமக்களிடம் சிக்கிய காதல் ஜோடி, தாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், எங்களை வாழ விடுங்கள் என்று கூறி கதறியுள்ளனர். அதைக்கேட்ட பொதுமக்கள் திகைத்து விட்டனர். அவர்களை விரட்டி வந்த போலீசார் அங்கு வந்து சம்பவம் பற்றி பொதுமக்களிடம் கூறினர். இதையடுத்து அவர்கள், காதல் ஜோடியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு போலீசார் வாலிபர், இளம்பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள்.
சினிமா பாணியில் வீட்டில் இருந்து தப்பிய காதல் ஜோடி போலீசில் இருந்து தப்பிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.