டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு

திருவேங்கடத்தில் டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2021-09-22 21:04 GMT
திருவேங்கடம்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் ஆவுடையாள்புரம் சாலையில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை விற்பனையாளர் பெருமாள் கடையை திறக்க வந்தபோது, கடையின் முன்பக்கம் கதவும், இரும்பு தடுப்பும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 16 மதுபாட்டில்களும், 4 பீர் பாட்டில்களும் திருட்டு போனது தெரியவந்தது. விற்பனை பணத்தை வீட்டுக்கு எடுத்து சென்று இருந்ததால், பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. 

இதுகுறித்து பெருமாள் திருவேங்கடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலாதேவி வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். 

மேலும் செய்திகள்