ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட பெண் குழந்தை மீட்பு

ஜெயங்கொண்டம் அருகே ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 3 மாத பெண் குழந்தையை விற்ற தம்பதி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-22 20:54 GMT
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்(வயது 39). இவரது மனைவி மீனா(29). இவர்களுக்கு 4 வயது, 3 வயது,  1 வயது, 3 மாதம் என ஆகிய 4 பெண் குழந்தைகள். நான்கும் பெண் குழந்தைகள் என்பதால் தங்களால் வளர்க்க முடியாது என்று முடிவு செய்த அவர்கள் ஒரு குழந்தையை விற்க முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 1 ஆண்டுக்கு முன்பாக சுபஸ்ரீ என்ற 3 மாத பெண் குழந்தையை ஈரோடு பகுதி பவானியை சேர்ந்த புரோக்கர்கள் ராஜேந்திரன்(56), சித்தோடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (41), திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த முத்தையன் (52) ஆகியோர் மூலம் கோவையில் உள்ள ஒரு தம்பதிக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்திற்கு விற்றனர்.
இதனை அறிந்த அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் ஆலோசனையின்பேரில், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
குழந்தை மீட்பு
 முதல்கட்டமாக குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில், குழந்தையை காணவில்லை என்று தம்பதி நாடகமாடியுள்ளனர். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், 4 வதாக பிறந்த 3 மாத பெண் குழந்தையை கோவை தம்பதிக்கு விற்றதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கோவை சென்று அந்த குழந்தையை மீட்டனர்.
பின்னர், சரவணன்-மீனாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இரண்டு பேருமே இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதும், மீனாவிற்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி 9 வயதில் பெண் குழந்தை உள்ளதும், கணவரை பிரிந்த அவர் இரண்டாவதாக சரவணனை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் அவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் பிறந்ததும் தெரியவந்தது. இதேபோல, சரவணனுக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு குழந்தையும் விற்பனை?
அவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில் சரவணன், மீனா மற்றும் குழந்தையை விற்க புரோக்கர்களாக செயல்பட்ட ராஜேந்திரன், செந்தில்குமார், முத்தையன் மற்றும் குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய கோவை தம்பதி ஆகிய 7 பேரை ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் கைது செய்தார்.
மேலும், 4 பெண் குழந்தைகளில் 3-வது பெண் குழந்தையை கடந்த சில ஆண்டுக்கு முன்பு ரூ.1 லட்சத்திற்கு விழுப்புரம் அருகே உள்ள காட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு விற்றதாவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


மேலும் செய்திகள்