மண்டியாவில் தசரா விழா 9-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும்
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் தசரா விழா அடுத்த மாதம் 9&ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் அஸ்வதி கூறினார்.
மண்டியா: மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் தசரா விழா அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் அஸ்வதி கூறினார்.
தசரா விழா
மைசூருவில் நடைபெறுவதுபோல் ஒவ்வொரு ஆண்டும் மண்டியா மாவட்டத்திலும் தசரா விழா கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மைசூருவில் கொண்டாடப்பட்டதுபோல் மண்டியாவிலும் தசரா விழா எளிமையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் மண்டியாவில் இந்த ஆண்டுக்கான தசரா விழாவை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மண்டியா மாவட்ட கலெக்டர் அஸ்வதி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட கலெக்டர் அஸ்வதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மண்டியாவில் அடுத்த மாதம்(அக்டோபர்) 9-ந் தேதி முதல் 3 நாட்கள் தசரா விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டு தசரா விழா ஸ்ரீரங்கப்பட்டணாவில் நடைபெறும். ஸ்ரீரங்கநாதசுவாமி மைதானம், செந்தில் கோட்டை, தாலுகா விளையாட்டு மைதானம் கிரங்கூரு உள்ளிட்ட இடங்கள் வழியாக தசரா விழா ஊர்வலம் எளிமையாக நடத்தப்பட்டு பன்னிமண்டபத்தை வந்தடையும். அங்கு நிறைவு விழா நடைபெறும்.
நேரில் ஆய்வு
தசரா விழாவையொட்டி மக்கள் அதிக அளவில் கூடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. விழா எளிமையாக நடந்தாலும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் அனைத்தும் வழக்கம்போல் நடைபெறும். கலை நிகழ்ச்சிகளில் குறைந்த அளவு கலைஞர்களே கலந்து கொள்வார்கள். மக்கள் அதிக அளவில் கூடுவதை தடுக்க போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அவர் அதிகாரிகளுடன் தசரா ஊர்வலம் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.