பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் சாவு
நெல்லை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் திடீரென இறந்தார்.
நெல்லை:
நெல்லை அருகே முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து மேலும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கோபாலசமுத்திரம், பிராஞ்சேரி, கொத்தன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் உள்பட 8 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், விருதுநகர் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறை போலீஸ்காரர் கபிலன் (வயது 38) என்பவர் கடந்த 18-ந் தேதி கோபாலசமுத்திரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. உடனே சக போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி கபிலன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அஞ்சலி செலுத்தினார்.
இறந்த கபிலன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேசிகாபுரத்தை சேர்ந்தவர். அவருக்கு மரகதம் என்ற மனைவியும், முகிலன் என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர்.