தஞ்சையில் உணவகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைப்பு

தஞ்சையில் உணவகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் மதுபான பார் உள்ளிட்ட மேலும் 3 கடைகளில் நோட்டீசு ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-22 20:16 GMT
தஞ்சாவூர்:
தஞ்சையில் உணவகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் மதுபான பார் உள்ளிட்ட மேலும் 3 கடைகளில் நோட்டீசு ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாநகராட்சி
தஞ்சை பழைய பஸ் நிலையம் மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா உள்ளது. இந்த சபா குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்த சபாவின் முன்பகுதியில் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு உணவகம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. தற்போது அங்கு தேவர் ரெஸ்டாராண்ட் உணவகம் செயல்பட்டு வருகிறது. 
மேலும் இந்த வளாகத்தில் மதுபான கூடம், பேக்கரி கடை, செல்போன் கடை ஆகியவையும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த உணவகம் மற்றும் மதுபான கூடம், பேக்கரி கடை, செல்போன் கடை ஆகியவை நகர ஊரமைப்பு சட்டம் 1971 விதிகளின்படி உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கப்போவதாக மாநகராட்சி சார்பில் கடந்த 13&8&2021 அன்று அறிவிப்பு கொடுக்கப்பட்டது.
பூட்டி சீல் வைப்பு
இதையடுத்து கடைகளை நடத்தி வந்தவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் நீதிமன்றம், கட்டிடம் தொடர்பாக அரசிடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தது. ஆனால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் உணவகத்திற்கு அனுமதி பெற்றதற்கான விவரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் நேற்று உணவகத்தை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
அதன்படி மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், இளநிலை பொறியாளர் கண்ணதாசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று உணவகத்தை பூட்டி சீல் வைத்தனர். மதுபானகூடம், பேக்கரி, செல்போன் கடை ஆகியவற்றுக்கு கால அவகாசம் உள்ளதால் அந்த கடைகளில் மாநகராட்சி சார்பில் நோட்டீசு ஒட்டப்பட்டது. 
மதுபான பார், கடைகளுக்கு நோட்டீசு
அந்த நோட்டீசில், சுதர்சன சபா (பேக்கரி, மதுபான கூடம், செல்போன் கடை) கட்டிடத்திற்கு 13&8&2021 அன்று நகர் ஊரமைப்பு சட்டம் 1971&ன்படி அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் மேற்படி கட்டிடத்தை உரிய அறிவிப்பின் கீழ் உரிய அனுமதி பெற்ற விவரம் சமர்ப்பிக்காததால் அல்லது திருத்தி அமைக்காததால் இந்த கட்டிடம் நகர் ஊரமைப்பு சட்டத்தின்படி வருகிற 28&ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பூட்டி  சீல் வைக்க உத்தரவிடப்படுகிறது. எனவே பொருட்களை அப்புறப்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. சீல் வைக்கப்படும் கட்டிடத்திற்கு பாதுகாப்பு தர வேண்டியது சட்டப்படி கட்டிட உரிமையாளரின் முழு பொறுப்பாகும். எனவே தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறதுÓ என அதில் கூறப்பட்டுள்ளது.
கடை பூட்டி சீல் வைக்கப்பட்டதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே குத்தகைக்கு விடப்பட்டு முடிவடைந்த தியேட்டர், லாட்ஜ், மற்றும் கிளப்பு போன்ற கட்டிடங்களை மாநகராட்சி நேற்று முன்தினம் கையகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது உணவகத்துக்கு சீல் வைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்