சாதி சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் தர்ணா போராட்டம்

சாதி சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் தர்ணா போராட்டம்

Update: 2021-09-22 19:59 GMT
சேலம், செப்.23-
பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தர்ணா போராட்டம்
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் குரால்நத்தம் ஊராட்சி ஜருகுமலை, கம்மாளப்பட்டி, தும்பல்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் இங்குள்ள குழந்தைகளுக்கு பழங்குடியினர் என சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அவர்களுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லை என்று அதிகாரிகள் கூறி அலைக்கழிப்பு செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. 
இந்நிலையில், ஜருகுமலை பகுதியை சேர்ந்த 200&க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் நேற்று தங்களது குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இருப்பினும் அவர்கள் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். 
பேச்சுவார்த்தை
இதையடுத்து சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி மற்றும் போலீசார் உடனடியாக அங்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் விண்ணப்பித்த அனைவருக்கும் உரிய முறையில் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கூறும்போது, Ôசாதி சான்றிதழ் கேட்டு 3 ஆண்டுகளாக அலைந்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி 300 பேருக்கு சான்றிதழ் தர மறுக்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளை சேர்க்க சாதி சான்றிதழ் இல்லாமல் சிரமப்படுகிறோம். உயர் கல்வி படிக்கவும் சாதி சான்றிதழ் அவசியமாகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை பெறுவது, பெண்களுக்கு கறவை மாடுகள் வழங்கும் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி, பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் பயன்பெற வேண்டும் என்றால் சாதி சான்றிதழ் கட்டாயம் தேவை. ஆனால் அதிகாரிகள் பழங்குடியினர் என சான்றிதழ் தர மறுக்கிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என்றனர்.



   

மேலும் செய்திகள்