12 மீனவர்களுடன் படகு உடைந்து நடுக்கடலில் மூழ்கியது

கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் 12 மீனவர்கள் மீன்பிடித்த போது வீசிய சூறைக்காற்றில், படகு உடைந்து மூழ்கியது. இந்த படகில் இருந்த 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் ஒரு மீனவரின் கதி என்னவென்று தெரியவில்லை.

Update: 2021-09-22 19:53 GMT
குளச்சல்:
கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் 12 மீனவர்கள் மீன்பிடித்த போது வீசிய சூறைக்காற்றில், படகு உடைந்து மூழ்கியது. இந்த படகில் இருந்த 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் ஒரு மீனவரின் கதி என்னவென்று தெரியவில்லை.
நடுக்கடலில் படகு உடைந்தது 
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கேரள மாநிலத்தில் தங்கியிருந்து மீன்பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சத்தியக்குளம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து குளச்சல், வாணியக்குடி, மிடாலம், அருமனை ஆகிய கிராமங்களை சேர்ந்த 9 குமரி மீனவர்கள், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 3 மீனவர்கள் உள்பட 12 பேர் ஒரு விசைப்படகில் கடந்த 17-ந் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 
இந்த விசைப்படகு குமரி மாவட்டத்தை சேர்ந்த கென்னடி மற்றும் ஜெரால்டு பாபு என்பவருக்கு சொந்தமானது ஆகும். இந்தநிலையில் நேற்று அதிகாலை கன்னியாகுமரியில் இருந்து சுமார் 17 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று வீசிய பயங்கர சூறைக்காற்றில் விசைப்படகு சேதமடைந்தது. அதாவது, அடிப்பகுதி உடைந்து கடல்நீர் படகிற்குள் புகுந்தது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
11 மீனவர்கள் மீட்பு
மேலும், உடைந்த படகில் இருந்து உயிர் பிழைப்பது எப்படி? என்பது தெரியாமல் பரிதவித்தனர். நல்ல வேளையாக அந்த படகின் அருகே கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். உடனே அவர்களை உதவிக்கு வருமாறு அழைத்தனர். அவர்களும் உடைந்த படகின் அருகில் வந்து, உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். படகு கொஞ்சம், கொஞ்சமாக கடலில் மூழ்க தொடங்கியது.
இந்த பெரும் பதற்றத்துக்கு இடையே 12 மீனவர்களில் 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். 
ஒரு மீனவர் மாயம்
ஆனால் வாணியக்குடி கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மகன் ஜான் (வயது 57) என்ற மீனவர் மட்டும் மாயமாகி விட்டார். அவர் மீட்பு பணியின் போது கடலில் மூழ்கி மாயமாகி இருக்கலாம் என சக மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனை அறிந்த மற்ற மீனவர்கள் படகில் சென்று தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 
ஜான் கடலில் மூழ்கியதை கேள்விபட்ட அவரது சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கி உள்ளது. மாயமான மீனவர் ஜானுக்கு சரோஜா என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகனும் உள்ளனர்.
மேலும் மாயமான ஜானை தேடும் பணியில் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இவர்கள், சம்பவம் நடந்த இடத்தில் தேடுதல் பணிக்கு சென்ற போது அங்கு விசைப்படகு இல்லை. இதனால் படகு முழுமையாக மூழ்கி இருக்கலாம் என்றும் இல்லையென்றால் கடலில் வீசும் காற்றின் திசைக்கு ஏற்ப படகு அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்றும் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 
இதற்கிடையே மாயமான மீனவரை போர்க்கால அடிப்படையில் கண்டுபிடித்து மீட்க வேண்டும் என தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தமிழக அரசுக்கும், இந்திய கடலோர காவல் படைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்