தோகைமலை பகுதிகளில் நாற்று விடும் பணி
பருவமழை தொடங்கி உள்ளதால் தோகைமலை பகுதிகளில் நாற்று விடும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தோகைமலை
நாற்று விடும் பணி
கரூர் மாவட்டம் தோகைமலை, கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்டி மலை, புழுதேரி, வடசேரி, ஆலத்தூர், பாதிரிப்பட்டி நாகனூர் உள்பட 17 ஊராட்சிகளில் கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் குளத்து பாசனம் பகுதியாக இருந்து வருகிறது. தற்போது பருவமழை தொடங்கியதால் காவிரி நீர்வரத்து கணிசமாக வரத் தொடங்கியது.
மேலும் கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் தற்போது விவசாயிகள் விதை நெல் எடுத்து நாற்று விடும் பணியிலும், வயல்களை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மும்முரம்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சென்ற ஆண்டு சம்பா சாகுபடிக்காக பிபிடி ரகமான ஆந்திரா, பொன்னி ஆகியவற்றை அதிக அளவில் சாகுபடி செய்தோம். ஆனால் நோய் தாக்கத்தால் மகசூல் அதிக அளவில் கிடைக்காமல் பாதிக்கப்பட்டோம். இதனால் இந்தாண்டு டிகேஎம் 13 மற்றும் 5204 ஆகிய ரக விதைகளை நாற்று விட்டு வைத்துள்ளோம்.
மேலும் புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதால் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகிறாம். பருவம் தவறினால் நோய் தாக்குதல் ஏற்படும். இதனால் சூரிய ஒளிபடும் அளவில் இடைவெளிவிட்டு நாற்று நடவு செய்து வருகிறோம். இதனால் 120 நாட்களில் நல்ல மகசூல் அடைய முடியும் என்றனர்.