மோதகபல்லி ஊராட்சியில் இளைஞர்கள் வைத்துள்ள டிஜிட்டல் பேனரால் பரபரப்பு

மோதகபல்லி ஊராட்சியில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர். அதில் தேர்தலில்செல்வுசைய்யும் பணத்தை ஊராட்சி வளர்ச்சிநிதியில் இருந்து எடுத்து விடலாம் என்று நினைப்பவர்கள் வரவேண்டாம் என்று கூறி உள்ளனர்.

Update: 2021-09-22 18:21 GMT
திருப்பத்தூர்

மோதகபல்லி ஊராட்சியில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் டிஜிட்டல் பேனர்  வைத்துள்ளனர். அதில் தேர்தலில்செல்வுசைய்யும் பணத்தை ஊராட்சி வளர்ச்சிநிதியில் இருந்து எடுத்து விடலாம் என்று நினைப்பவர்கள் வரவேண்டாம் என்று கூறி உள்ளனர்.

டிஜிட்டல் பேனர்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மோதகபல்லி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் ஒரு டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர். கூறப்பட்டிருப்பதாவது:-

மோதகப்பல்லி ஊராட்சியில் தலைவர் பதவி, வார்டு கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் அன்பான அறிவிப்பு.

வரவேண்டாம்

ஊராட்சி பதவிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சி வளர்ச்சிக்கு வரும் பணத்தில் இருந்து எடுத்து விடலாம் என்று யாரும் நினைத்து வரவேண்டாம். கிராமசபை கூட்டங்களில் மோதகப்பல்லி ஊராட்சி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் வரவு செலவு கணக்கு கேட்டு அறியப்படும். அப்படி கேட்டு அறியப்படும் அனைத்து தகவல்களும் சரியானதா என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி சரிபார்க்கப்படும்.

ஊழல் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ஊழல் செய்தவர் புகைப்படம், பெயர், பதவி போன்றவை சமூக வலைதளங்களில் வெளியிட்டப்படுவதுடன் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் புகார் அளிப்போம்.
இங்கனம், மோதகப்பல்லி ஊராட்சி இளைஞர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள்

என அந்த டிஜிட்டல் பேனரில் இடம்பெற்றுள்ளது.

பரபரப்பு

இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.மேலும் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனுதாக்கல் முடிவடைந்த நிலையில், பொதுமக்களின் இந்த விழிப்புணர்வு பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்