அடையாள அட்டை இல்லாமல் மீன் பிடித்த 5 மீனவர்கள்

ராமேசுவரம் கடல் பகுதியில் மீன்பிடி அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டை இல்லாமல் மீன்பிடித்த 5 மீனவர்களை கடற்படையினர் பிடித்து மீன்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Update: 2021-09-22 17:47 GMT
ராமேசுவரம், 
ராமேசுவரம் கடல் பகுதியில் மீன்பிடி அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டை இல்லாமல் மீன்பிடித்த 5 மீனவர்களை இந்்திய கடற்படையினர் பிடித்து மீன்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
ரோந்து
ராமேசுவரம் கடல் பகுதியில் நேற்று ரோந்து படகு ஒன்றில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்த மண்டபத்தைச் சேர்ந்த மீன்பிடி படகு ஒன்றை நிறுத்தி கடற்படையினர் படகில் ஏறி சோதனை செய்தனர். 
சோதனை செய்ததுடன் படகில் இருந்த மீனவர்களிடம் மீன்பிடி அனுமதி சீட்டு மற்றும் மீனவர் அடையாள அட்டைகளையும் கேட்டு விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அந்த படகில் இருந்த மீனவர்களிடம் மீன்பிடி அனுமதி சீட்டு மற்றும் மீனவர் அடையாள அட்டை ஏதும் இல்லாமல் மீன்பிடிக்க வந்திருப்பதும் தெரியவந்தது. 
தொடர்ந்து படகுடன் 5 மீனவர்களையும் ராமசுவரம் கடற்படை முகாமுக்கு அழைத்து வந்து கடற்படையினர் மண்டபத்தில் உள்ள மீன் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அனுமதிச் சீட்டு இல்லாமல் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு மற்றும் 5 மீனவர்களையும் மீன்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
நடவடிக்கை 
தொடர்ந்து மண்டபம் மீன்துறை அதிகாரிகள் அடையாள அட்டை மற்றும் மீன்பிடி அனுமதிச்சீட்டு இல்லாமல் மீன்பிடிக்கச் சென்ற மண்டபத்தை சேர்ந்த ஒரு விசைப்படகிற்கான மீன்பிடி அனுமதிச் சீட்டு மற்றும் மானிய டீசலையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்