விருத்தாசலத்தில் நிலத்திற்கு அடங்கல் சான்று பெற என்ஜினீயரிடம் லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் கைது
விருத்தாசலத்தில் நிலத்திற்கு அடங்கல் சான்று பெற என்ஜினீயரிடம் லஞ்சம் வாங்கிய, பதிவறை எழுத்தர் கைது செய்யப்பட்டார்.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அண்ணாநகர் காட்டுக்கூடலூர் சாலையை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் அருண் (வயது 23). என்ஜினீயரான இவருக்கு குப்பநத்தம் கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு அடங்கல் சான்று கேட்டு விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் அருண் விண்ணப்பித்திருந்தார்.
அப்போது அங்கிருந்த பதிவறை எழுத்தர் சிவக்குமார், அடங்கல் சான்று வேண்டும் என்றால் தனக்கு ரூ.2 ஆயிரத்து 500 லஞ்சம் தர வேண்டும் என்று அருணிடம் தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அருண், இதுபற்றி கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.
கைது
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறிய அறிவுரையின்படி, ரசாயன பொடி தடவிய 1,500 ரூபாயை எடுத்துக் கொண்டு அருண் நேற்று காலை விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த பதிவறை எழுத்தர் சிவக்குமாரிடம், 1,500 ரூபாயை அருண் வழங்கினார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மாலா, திருவேங்கடம் மற்றும் போலீசார் லஞ்சம் வாங்கிய சிவக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை ஜீப்பில் ஏற்றி காட்டுக்கூடலூர் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை. பின்னர் அங்கிருந்து கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ஜினீயரிடம் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.