விருத்தாசலம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
விருத்தாசலம் அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் அமைந்துள்ள ஏரிக்கரை தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மேடாக இருப்பதாலும் ஒரு சில தனிநபர்கள் மின் மோட்டார்களை பயன்படுத்தி குழாயில் இருந்து குடிநீரை உறிஞ்சி எடுப்பதாலும் பல வீடுகளுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
மேலும் குடிநீருக்காக அருகில் உள்ள தெரு பகுதிகளுக்குச் சென்று குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் அந்த தெரு பகுதி மக்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் இடையே பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி விரைவில் உரிய முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் விரைவில் குடிநீர் பிரச்சினையை சரி செய்யாவிட்டால் விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.