ஊரக உள்ளாட்சி தேர்தல்: விழுப்புரம் மாவட்டத்தில் 24 ஆயிரம் பேர் வேட்பு மனு தாக்கல்
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 6, 097 பதவியிடங்களுக்கு 24 ஆயிரம் பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது.
விழுப்புரம்,
விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 688 கிராம ஊராட்சி தலைவர், 5, 088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 6, 097 பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இதில் முதல்கட்டமாக அக்டோபர் 6&ந் தேதியன்று செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களுக்கும், 2-ம் கட்டமாக 9-ந் தேதி காணை, கோலியனூர், மயிலம், மரக்காணம், மேல்மலையனூர், வல்லம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 15&ந் தேதியன்று தொடங்கிய வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இறுதி நாளான நேற்று, வேட்பாளர்கள் தங்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தங்கள் ஆதரவாளர்களுடன் மேள, தாளத்துடன், பட்டாசு வெடித்தும் ஊர்வலமாக சென்று உற்சாகத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
24 ஆயிரம் பேர் வேட்பு மனு தாக்கல்
வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 155 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 1, 121 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 978 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 4, 956 பேரும் ஆக மொத்தம் 7, 210 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதன் அடிப்படையில் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 241 பேரும், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2, 091 பேரும், 688 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 4, 138 பேரும், 5, 088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 17, 530 பேரும் ஆக மொத்தம் 6, 097 பதவியிடங்களுக்கு 24 ஆயிரம் பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.