கோவில் இடித்து அகற்றம்
ஐகோர்ட்டு உத்தரவுப்படி போடியில் உள்ள கோவில் இடித்து அகற்றப்பட்டது.
போடி:
போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனி 4&வது தெருவில் வீரகாளியம்மன் கோவில் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த கோவிலில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தினமும் பூஜை செய்து வழிபாடு நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி போடி நகராட்சி கமிஷனர் சகிலா, போடி தாசில்தார் செந்தில் முருகன், போடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று அந்த கோவில் இடித்து அகற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு குவிந்தனர். பின்னர் அவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இடிக்கப்பட்ட கோவிலில் இருந்த வீரகாளியம்மன் சிலை போடி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதேபோல் கோவிலில் இருந்த மணி உள்ளிட்ட உபகரணங்கள் நகராட்சி அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. கோவில் இடிக்கப்பட்ட சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.