லாரி மீது கார் மோதியதில் தொழிலாளி பலி
ஓசூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். இவருடைய நண்பர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;
ஓசூர்:
நண்பர்கள்
ஓசூர் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.நகரை சேர்ந்தவர் ரதீஸ் (வயது 39). அதே பகுதியில் வசித்து வருபவர் சத்யசீலன் (32). நண்பர்களான இவர்கள் 2 பேரும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று அவர்கள் ஓசூர்&பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கிருஷ்ணா (21) என்பவர் ஓட்டி சென்றார். வழியில் வனத்துறை சோதனைச்சாவடி அருகே முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரியின் பின்புறம், கார் வேகமாக மோதியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சத்யசீலன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
சிகிச்சை
ரதீஸ் மற்றும் கார் டிரைவர் கிருஷ்ணா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கி பலியான சத்யசீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.