நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வியாபாரி பலி
நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வியாபாரி பலியானார்.
நிலக்கோட்டை:
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை தெருவை சேர்ந்த மருதுபாண்டியன் மகன் தினேஷ்குமார் (வயது 31). தேங்காய் வியாபாரி. இவர் வேலை தொடர்பாக நேற்று திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து அவர் நிலக்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
நிலக்கோட்டை அருகே ஆட்சிபுரம் பாலம் என்ற பகுதியில் அவர் வந்தபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிகெட்டு ஓடிய அந்த மோட்டார் சைக்கிள், அங்கு சாலையோரம் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்த சித்தர்கள்நத்தம் அண்ணாபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (31) என்பவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதற்கிடையே எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் சிவஞானபுரத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது மாமியார் முனியம்மாளுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது தினேஷ்குமாரின் மோட்டார் சைக்கிள், சந்திரசேகரன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சந்திரசேகரன், முனியம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்னர் விபத்தில் காயமடைந்த முத்துப்பாண்டி உள்பட 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.