10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த கட்டிடத்தொழிலாளி கைது

தேனி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவியை, திருமணம் செய்த கட்டிடத்தொழிலாளி கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-09-22 15:09 GMT
உத்தமபாளையம்:
10-ம் வகுப்பு மாணவி

கொரோனா ஊரடங்கு காலத்தின்போது, தேனி மாவட்டத்தில் இளம்வயது திருமணம் அதிகரித்து உள்ளது. இதற்கு உதாரணமாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 15 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். 

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் க.விலக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுமி, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பு அந்த சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மணி (வயது 31) என்பவர் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார்.

10-ம் வகுப்பு படித்து கொண்டிருந்த அந்த சிறுமிக்கு, அவரது பெற்றோரே கட்டிடத்தொழிலாளி மணிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். நிறைமாத கர்ப்பிணியான அந்த சிறுமி, பிரசவத்துக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் உண்மை வெளியானது.

போக்சோவில் கைது 

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினர், மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

 இதனையடுத்து உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம், சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தினர். 
சிறுமியை திருமணம் செய்த மணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

மேலும் திருமணத்துக்கு உடந்தையாக இருந்த மணியின் தாயார், தம்பி, சிறுமியின் தாய், தந்தை ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மணியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்