சிறந்த சட்டமேதைகளாக விளங்க வேண்டும் - மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை

சிறந்த சட்டமேதைகளாக விளங்க வேண்டும் என்று அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

Update: 2021-09-22 14:33 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், மகாகவி பாரதியார், இந்தியா சுதந்திரம் அடைய பலகட்ட போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் பெண்கள் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக உரக்க குரல் கொடுத்தவர். ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்று அந்நாளிலேயே பெண்ணுரிமையை போற்றியுள்ள பாரதி கூறிய வாக்கினை மெய்ப்பித்திடும் வகையில் இன்று பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சிறந்து விளங்கி வருகின்றனர்.

கொரோனா நோய் தொற்றினால் நீண்ட இடைவெளிக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டு சட்டக்கல்வி பயின்று வரும் மாணவ- மாணவிகள், பாரதியார் கூறிய வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொண்டு பெண்களுக்கான அனைவருக்கும் சமநீதி, தீண்டாமை, சட்டம்- ஒழுங்கு போன்றவற்றை நன்கு பயின்று, வரும் காலங்களில் சிறந்த சட்டமேதைகளாக விளங்க வேண்டும் என்றார்.

அதனை தொடர்ந்து மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் டி.மோகன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக கல்லூரி வளாகத்தில் கலெக்டர், மரக்கன்று நட்டு வைத்ததோடு பாரதியாரின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்த சுவரொட்டியை பார்வையிட்டார்.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், சட்டக்கல்லூரி முதல்வர் கயல்விழி, உதவி பேராசிரியர் சவிதா, ஊர்க்காவல் படை மண்டல தளபதி ரகுநாதன், இ.எஸ். அறக்கட்டளை தலைவர் சாமிக்கண்ணு, விழுப்புரம் பாவேந்தர் பேரவை தலைவர் ஆசைத்தம்பி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கல்லூரி உதவி பேராசிரியர் ராமஜெயம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்