சீர்காழி மீன்மார்க்கெட்டில் மீன்களில் பார்மலின் ரசாயனம் கலக்கப்படுகிறதா? உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு
சீர்காழி மீன்மார்க்கெட்டில் உள்ள மீன்களில் பார்மலின் ரசாயனம் கலக்கப்படுகிறதா? என உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சீர்காழி,
மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின்(நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்) ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத்துறைக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி சீர்காழி நகராட்சியில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் மீன்களில் பார்மலின் ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுகிறதா? என நேற்று காலை
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அன்பழகன், சேகர், சீனிவாசன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் லட்சுமிகாந்தன், சதுருதீன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதில் பரிசோதனை கிட்கள் உதவியுடன் மீன் மீது மாதிரி எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் மீன்களில் பார்மலின் கலக்கப்படவில்லை என்பதும், கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் கூறுகையில், ரசாயனம் கலந்த மீன்களையும், இறைச்சிகளையும் விற்பனை செய்தால் அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.