ராஜேந்திரா சாலையில் சுகாதார பணிகள்

ராஜேந்திரா சாலையில் சுகாதார பணிகள்

Update: 2021-09-22 11:19 GMT
உடுமலை
உடுமலை நகராட்சி பகுதியில் கல்பனா சாலை, வ.உ.சி.வீதி, கச்சேரி வீதி உள்ளிட்ட பல இடங்களில் நகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. கல்பனா சாலையில் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகாலில் செல்லும் தண்ணீர் ராஜேந்திரா சாலையில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால் மூலம் பழனிசாலை பகுதிக்கு சென்று சேரவேண்டும்.ஆனால் ராஜேந்திரா சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் சேறுசகதிகள், கழிவுகள், குப்பைகள் ஆகியவை நிறைந்து கிடந்தன. அதனால் அந்த இடத்தில் மழைத்தண்ணீர் செல்லமுடியாத நிலை இருந்தது. அங்கு ஆட்டிறைச்சி கடைகள், கோழி இறைச்சி கடைகள், மீன்கடைகள், மளிகை மற்றும் காய்கறி கடைகள், பழக்கடைகள் அதிகம் உள்ளன. சில கடைக்காரர்கள் அந்த மழைநீர் வடிகாலின் மேல்பகுதியில் சிலாப்புகளை வைத்து மூடி நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர். அந்த மழைநீர் வடிகால், கழிவுநீர் மற்றும் கழிவுகளால் சாக்கடை கால்வாயாகவே இருந்து வந்தது. சில இடங்களில் சிலாப்புகள் வைத்து மூடப்பட்டிருந்ததால் அந்த கால்வாயை சுத்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அத்துடன் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து நேற்று நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 15 பேர், ராஜேந்திரா சாலையில் கடைகளின் முன்பு, மழைநீர் வடிகாலின் மேல் வைக்கப்பட்டிருந்த சிலாப்புகளை அகற்றி, அங்கு நிறைந்திருந்த சாக்கடை கழிவுகளை அப்புறப்படுத்தினர். இந்த சுகாதாரப்பணிகள் நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் க.கவுரி சரவணன், சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.செல்வம், பி.செல்வம், ஏ.ராஜ்மோகன் ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவுப்பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.



மேலும் செய்திகள்