திருநின்றவூரில் 6 ஏ.டி.எம். எந்திரங்கள் சுத்தியலால் உடைப்பு - ரியல் எஸ்டேட் தரகர் போலீசில் சரண்
திருநின்றவூரில் ஒரே நாள் இரவில் 6 ஏ.டி.எம். எந்திரங்களை சுத்தியலால் உடைத்த ரியல் எஸ்டேட் தரகர் போலீசில் சரண் அடைந்தார்.
ஆவடி,
ஆவடியை அடுத்த திருநின்றவூர் சி.டி.எச். சாலையில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் வங்கிகளின் ஏ.டி.எம். எந்திரங்கள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
3 ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., ஒரு கனரா வங்கி ஏ.டி.எம்., ஒரு ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம்., ஒரு யூனியன் வங்கி ஏ.டி.எம். என மொத்தம் 6 ஏ.டி.எம். எந்திரங்கள் உடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து உடனடியாக திருநின்றவூர் போலீசில் புகார் செய்தனர்.
இந்தநிலையில் திருநின்றவூர் போலீசில் சுத்தியலுடன் ஒருவர் சரண் அடைந்தார்.
விசாரணையில் அவர் திருநின்றவூர் பிரகாஷ் நகர் 6-வது தெருவில் வசித்து வரும் சேஷாத்திரி (வயது 50) என்பது தெரியவந்தது. அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர் ரியல் எஸ்டேட் தரகராக வேலை செய்து வந்துள்ளார்.
விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான நான் 2 நாட்களுக்கு முன்பு ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுக்க சென்றேன். அங்கு பணம் இல்லை என்பது தெரியவந்தது.
அதனால் அதிக மன உளைச்சலுக்கு உள்ளான நான் வாழ பிடிக்கவில்லை என்று கூறி ஏ.டி.எம் எந்திரங்களை சுத்தியலால் அடித்து நொறுக்கினேன். என்னை கைது செய்து சிறையில் அடையுங்கள்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் சேஷாத்ரியை கைதுசெய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.