திருவள்ளூர் அருகே மின் கம்பத்தில் கார் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலி

திருவள்ளூர் அருகே மின் கம்பத்தில் கார் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

Update: 2021-09-22 09:11 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 59). தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் பூமணிகண்டன் (31). நேற்று முன்தினம் பூமணிகண்டன் தனது தந்தை வெங்கடேசன் மற்றும் அவருடன் பணிபுரியும் திருநின்றவூர் ராமதாஸ் சாலை பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (24), கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த கார்த்திக் (26) ஆகியோருடன் காரில் வேலையின் காரணமாக கோயம்பேடு சென்றார்.

பின்னர் அவர்கள் வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் திருநின்றவூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த காரை பூமணிகண்டன் ஓட்டினார். பக்கத்து இருக்கையில் அவரது தந்தை வெங்கடேசன் அமர்ந்திருந்தார்.

பின் இருக்கையில் பணியாளர்களான ஜெகதீசன், கார்த்திக் ஆகியோர் அமர்ந்திருந்தனர். திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள சித்துக்காடு மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்தது.

இதனால் பதறிப்போன பூமணிகண்டன் பிரேக் பிடித்தார். இதில் அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். மேலும் அந்த காரில் இருந்த ஜெகதீஷ், கார்த்திக் ஆகியோர் காயம் அடைந்தனர்.

பூமணிகண்டன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதில் காயம் அடைந்த ஜெகதீசன், கார்த்திக் ஆகியோரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்