காரிமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம்-2 குழந்தைகளின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது
காரிமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த 2 குழந்தைகளின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த 2 குழந்தைகளின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பிளஸ்-2 மாணவி
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதம் 23-ந் தேதி அருகிலுள்ள கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற அந்த மாணவி வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மாணவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளி ஊராட்சி ஆணை கொட்டாய் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் தம்பிதுரை (வயது 31) என்பவர் கடத்தி சென்று விட்டதாக, மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
2 குழந்தைகளின் தந்தை கைது
இதையடுத்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி மற்றும் கடத்திச்சென்றவரை தீவிரமாக தேடிவந்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தம்பிதுரை சொந்தமாக லாரி வைத்திருப்பதும், அவர் திருமணம் ஆனவர் என்பதும் தெரியவந்தது. அவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் அவர் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டு, விருதுநகர் அருகே பாதரகுடி பகுதியில் குடும்பம் நடத்தி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனே பாதரகுடிக்கு விரைந்து சென்ற போலீசார், தம்பிதுரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ததுடன் அந்த மாணவியையும் காரிமங்கலத்துக்கு மீட்டு வந்தனர். பின்னர் அந்த மாணவியை அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.