தர்மபுரி அருகே திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி மர்ம சாவு-உரிய விசாரணை கோரி உறவினர்கள் சாலை மறியல்
தர்மபுரி அருகே திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி அருகே திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்ப்பிணி மர்ம சாவு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வெங்கானூர் கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா என்ற வனிதா (வயது 24), என்ஜினீயர். வனிதாவிற்கும், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே மலையப்பநகர் கிராமத்தை சேர்ந்த மாணிக்கவாசகம் (30) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
மாணிக்கவாசகம் ராணுவத்தில் பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த வனிதா நேற்று காலை கணவரின் வீட்டு குளியல் அறையில், துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
உறவினர்கள் போராட்டம்
இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற போலீசார் இறந்து கிடந்த வனிதாவின் உடலை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வனிதா இறப்பு குறித்து தகவலறிந்து அவரது உறவினர்கள், கர்ப்பிணியின் உடலை கொண்டு சென்ற தனியார் ஆம்புலன்சை குறிஞ்சி நகர் சுங்கச்சாவடி முன் தடுத்து நிறுத்தி வனிதாவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக தொப்பூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஆம்புலன்சை விடுவித்தனர். அதன் பின்னர் வனிதாவின் உடல் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.
சாலை மறியல்
இந்தநிலையில் அங்கு திரண்ட நூற்றுக்கணக்கான உறவினர்கள் வனிதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தியும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சாலை மறியலை கைவிடுமாறு வலியுறுத்தினார்கள். அப்போது மறியலில் ஈடுபட்டிருந்தவர்களில் சிலரை அங்கிருந்து அப்புறப்படுத்தி போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர். இதனால் அந்த வேனையும் முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வனிதாவின் உறவினர்கள் தரப்பில் கூறுகையில், திருமணத்தின் போது 20 பவுன் நகையை வரதட்சணையாக கேட்டனர். 10 பவுன் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கூடுதலாக 10 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் கேட்டு வற்புறுத்தி உள்ளனர். வரதட்சணை கொடுமையால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வனிதாவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் நேற்று பிற்பகலில் முடிவுக்கு வந்தது.