முகவரி கேட்பது போல் நடித்து நகை பறித்த 2 பேர் சிக்கினர்

முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 2 பேர் சிக்கினர்.

Update: 2021-09-21 21:32 GMT
மதுரை
முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 2 பேர் சிக்கினர். 
பெண்ணிடம் நகை பறிப்பு 
மதுரை பழங்காந்த்தம் திருவள்ளூவர் நகர் 11&வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் விஜயன், கூலி தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா(வயது 48). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் மல்லிகாவிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கசங்கிலியை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றனர். 
ஆனால் அவர் சங்கிலியை இறுக்கி பிடித்து கொண்டதால் அவர்களிடம் ஒரு பவுன் மட்டும் சென்றது. மீதி 2 பவுன் சங்கிலி மல்லிகாவிடம் இருந்தது. இது குறித்து அவர் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர் 
அப்போது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த நாகேந்திரன், சதீஸ் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் பதுங்கியிருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். 
அதில் அவர்கள் தான் மல்லிகாவிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும், இது தவிர அவர்கள் வேறு இரு நகை பறிப்பு சம்பவங்களில் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை விரைந்து செயல்பட்டு கைது செய்த சுப்பிரமணியபுரம் போலீசாரை, போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா பாராட்டினர். 

மேலும் செய்திகள்