240 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் சிக்கினர்
240 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் சிக்கினர்
அலங்காநல்லூர்
மதுரை மாவட்ட எல்லைப்பகுதிகள் வழியாக புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி சோதனைச்சாவடிகளில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அலங்காநல்லூர் வழியாக அதிவேகமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது காரில் தடை செய்யப்பட்ட 240 கிலோ புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார் காரில் மூடை மூடையாக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த, சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியைச் சேர்ந்த நேசமணி (வயது 36) , மதுரை காதக்கிணறைச் சேர்ந்த வீரப்பன்(43), அலங்காநல்லூர் சின்ன ஊர்சேரியைச் சேர்ந்த பெரியதம்பி(37) ஆகிய 3 பேரையும் பிடித்தனர். மேலும் தனிப்படை போலீசார் கார் மற்றும் இருசக்கர வாகனம், ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 600 ஆகியவற்றையும் பறிமுதல் செய்து சிக்கிய 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.