கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கு: மூளையாக செயல்பட்டவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் மூளையாக செயல்பட்டவர் மீது பெங்களூரு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
பெங்களூரு: கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் மூளையாக செயல்பட்டவர் மீது பெங்களூரு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
கள்ளநோட்டு புழக்கம்
பெங்களூருவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 3 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4.34 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், கைதான 3 பேர் உள்பட பலர் கள்ளநோட்டுகளை அச்சடித்து நாடு முழுவதும் புழக்கத்தில் விட்டு வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மொத்தம் 7 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூரு கோர்ட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குற்றபத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த நிலையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜாகிருதீன் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம், மேற்கு வங்காள மாநிலம் மால்டாவில் தலைமறைவாக இருந்த ஜாகிருதீனை தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் கைதான 8-வது குற்றவாளி மீது நேற்று பெங்களூரு கோர்ட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.