சட்டசபையில் பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் வாக்குவாதம்

மந்திரி மாதுசாமியின் கருத்துக்கு ரேவண்ணா எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா-ஜனதாதளம்(எஸ்) கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-21 21:13 GMT
பெங்களூரு: மந்திரி மாதுசாமியின் கருத்துக்கு ரேவண்ணா எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா-ஜனதாதளம்(எஸ்) கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

நிதி ஒதுக்கீடு தீர்மானம்

கர்நாடக சட்டசபையில் நேற்று ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் ரேவண்ணா, எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். சபாநாயகர் காகேரி அதன் மீது விதி எண் 69&ன் கீழ் விவாதிக்க அனுமதி வழங்கினார். 

இதில் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் பேசினர். அந்த விவாதத்திற்கு சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி பதிலளிக்கையில் கூறியதாவது:-

வாக்குவாதம்

எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு பார்க்கப்பட்டுள்ளதாக ரேவண்ணா கூறினார். முன்பு குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது, நீங்கள் சரியான முறையில் அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கும் சமமாக நிதி ஒதுக்கீடு செய்தீர்களா?. 37 எம்.எல்.ஏ.க்கள் இருந்த உங்கள் கட்சிக்கு ரூ.2,794 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. எங்கள் கட்சியை சேர்ந்த 106 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு ரூ.2,986 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 

எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.28 கோடியும், உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு தலா ரூ.80 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்தீர்கள். இது பாரபட்சம் இல்லையா?. நான் பதிலளிக்கும்போது, நீங்கள் எழுந்து நின்று பேசுவது சரியல்ல. முதலில் இருக்கையில் உட்காருங்கள்.
இவ்வாறு மாதுசாமி கூறினார்.

அப்போது ரேவண்ணா குறுக்கிட்டு மந்திரி மாதுசாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு மாதுசாமி கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், கூச்சல்-குழப்பம் நிலவியது.

மேலும் செய்திகள்