கடந்த 5 ஆண்டுகளில் மின்னல் தாக்கி 32 பேர் பலி

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மின்னல் தாக்கி 32 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-09-21 18:54 GMT
ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மின்னல் தாக்கி 32 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதையொட்டி மழை பாதிப்பு ஏற்படாத வகையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, நீர்வரத்து கால்களை சரிசெய்யும் பணி, தாழ்வான பகுதிகளை சீராக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் சந்திரகலா மேற்பார்வையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை பேரிடர் பாதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இடி, மின்னல் தாக்கி 32 பேர் பலியாகி உள்ளனர். பரமக்குடியில் 11, முதுகுளத்தூர் 8, ஆர்.எஸ்.மங்கலம் 5, திருவாடானை 4, ராமநாதபுரத்தில் 4 பேர் என 32 பேர் பலியாகி உள்ளனர். இவர்களின் குடும்பத்திற்கு அரசின் சார்பில் ரூ.1.09 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டாரத்தில் 110 கால்நடைகளும், முதுகுளத்தூரில் 40, கமுதியில் 22, கீழக்கரையில் 11, ராமநாதபுரத்தில் 6, திருவாடானையில் 4, ராமேசுவரம் வட்டாரத்தில் 1 என மொத்தம் 206 கால்நடைகள் பலியாகி உள்ளன. இதன் உரிமையாளர்களுக்கு ரூ.16.08 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.
நிவாரண நிதி
முதுகுளத்தூர் வட்டாரத்தில் 208 குடிசைகளும், பரமக்குடியில் 203, திருவாடானையில் 183, ஆர்.எஸ்.மங்கலத்தில் 160, ராமநாதபுரத்தில் 157, கமுதியில் 127, கீழக்கரையில் 97, கடலாடியில் 89, ராமேசுவரத்தில் 18 என 1,242 குடிசைகள் பகுதி அளவில் சேதமாகின. இந்த குடிசைகளை மராமத்து பணி மேற்கொள்ள ரூ.61.4 லட்சம் அரசு சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் வட்டாரத்தில் 65, ராமேசுவரத்தில் 51, கீழக்கரையில் 46, திருவாடானையில் 39, ஆர்.எஸ்.மங்கலத்தில் 8, பரமக்குடியில் 30, முதுகுளத்தூரில் 11, கடலாடியில் 14, கமுதியில் 15 என 279 குடிசையில் முழுமையாக சேதமடைந்துள்ளன. இதன் உரிமையாளர்களுக்கு ரூ.14.05 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்