திருவண்ணாமலையில் தனியார் மருத்துவமனை முன்பு சாலை மறியல்
திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வயிற்றில் நீர் கட்டி
திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் அருகே உள்ள வரகூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி ராஜகுமாரி (வயது 38). இவருக்கு வயிற்றில் நீர்கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை ஆபரேஷன் மூலம் அகற்ற திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவருக்கு மாலையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. இதில், ராஜகுமாரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் ராஜகுமாரியின் உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் தான் அவருக்கு உடல்நலம் மோசமானதாக கூறி நேற்று மாலை சம்பந்தப்பட்ட மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
இதனால் அப்பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, ரமேஷ் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட ராஜகுமாரியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டம் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.