வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் அபேஸ்
வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்தவரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை,
வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்தவரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
வாடிக்கையாளர் சேவை மையம்
சிவகங்கையை அடுத்த மேல வாணியங்குடியை சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி (வயது 56). இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். இதற்காக அவரது செல்போனில் அந்த வங்கியின் மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்து இருந்தார்.
இந்த நிலையில் அந்த மொபைல் ஆப் திடீரென்று வேலை செய்யவில்லையாம். இதனால் அவர் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு இது பற்றி தெரிவித்துள்ளார். சற்று நேரத்தில் அவரது செல்போனிற்கு பேசிய ஒருவர் அவரது வங்கி கணக்கு எண், வங்கியின் ஏ.டி.எம். கார்டு நம்பர் உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளனர்.
ரூ.1 லட்சம் அபேஸ்
உடனே தெட்சிணாமூர்த்தியும் அந்த விவரங்களை கொடுத்தாராம். இதை தொடர்ந்து அந்த நபர் சற்று நேரத்தில் தெட்சிணாமூர்த்தியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்து விட்டாராம். இது குறித்து தெட்சிணாமூர்த்தி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் விமலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது குறித்து போலீஸ் உயர்அதிகாரிகள் கூறும் போது:&
தெட்சிணாமூர்த்தி தொடர்பு கொண்டு பேசிய வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தின் தொலைபேசி எண்ணும் போலி என தெரிய வந்து உள்ளது. எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் செல்போன் மூலம் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய எண் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்காதீர்கள். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே இது போன்ற பணமோசடியில் இருந்து தப்பிக்க முடியும் என்றனர்.