அரக்கோணத்தில் ரெயில் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்கைது

அரக்கோணத்தில் ரெயில் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பெண்ணை தேடி வருகின்றனர்.

Update: 2021-09-21 18:08 GMT
அரக்கோணம்

அரக்கோணத்தில் ரெயில் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பெண்ணை தேடி வருகின்றனர்.

போலீசார் ரோந்து

அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ உத்தரவிட்டிருந்தார். அதன்படி ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மேற்பார்வையில், அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ரெயில் நிலையங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். 

நேற்று மதியம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ரெயில் நிலையத்தின் நடைமேடைகளில் நீண்ட நேரமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

 வாலிபர் கைது

விசாரணையில் அவர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, பரப்பாடியை சார்ந்த ஆதிலிங்கம் மகன் சிவசங்கர் (வயது 20) என்பதும், கடந்த பிப்ரவரி மாதம் சபிரா பீவி என்ற பெண்ணுடன் சேர்ந்து சென்னையிலிருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. 

அவரிடமிருந்து விலை உயர்ந்த 3 செல்போன்கள், 6 கிராம் தங்க சங்கிலி, 40 கிராம் வெள்ளி மற்றும் 4 கிராம் தங்க மோதிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சப்&இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரை கைது செய்து, அரக்கோணம் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். தலைமறைவாக உள்ள சபிரா பீவியை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்