வேலூரில் பாலம் உடைந்து கால்வாயில் சிக்கிய லாரி

சத்துவாச்சாரியில் பாலம் உடைந்து மணல் ஏற்றிச் சென்ற லாரி கால்வாயில் சிக்கியது. புதியபாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-09-21 17:47 GMT
வேலூர்

சத்துவாச்சாரியில் பாலம் உடைந்து மணல் ஏற்றிச் சென்ற லாரி கால்வாயில் சிக்கியது. புதியபாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலம் உடைந்தது

வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு அருகே பாலாறு நோக்கி செல்லும் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. சத்துவாச்சாரி நேதாஜிநகர், காந்திநகர் பகுதியை இணைக்கும் வகையில் கால்வாய் மீது பாலம் ஒன்று அமைந்துள்ளது.

இந்த பாலத்தின் நடுப்பகுதி சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. அந்த பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அடிக்கடி அந்த பாலத்தின் வழியே லாரிகள் சென்று வரும். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல மண் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி பாலத்தின் வழியே சென்றது. பாலத்தின் நடுப்பகுதி பலவீனமாக காணப்பட்டதால் திடீரென பாலம் இரண்டாக உடைந்து விழுந்தது. இதனால் லாரியும் கால்வாய்க்கு உள்ளேயே எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்டது. மேலும் காந்திநகர், நேதாஜி நகர் மக்கள் அந்த பாலத்தின் வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

புதியபாலம் அமைக்க வேண்டும்

பின்னர் கிரேன் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு லாரியில் இருந்த மண் அப்புறப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து லாரியை மீட்கும் பணி நடைபெற்றது. சில மணி நேரத்துக்கு பின்னர் லாரி மீட்கப்பட்டது.
கால்வாய் பாலத்தை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது பாலம் இடிந்துள்ளதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்