கொடைக்கானல் மலைப்பாதையில் சரிந்து விழுந்த ராட்சத மரம்

கொடைக்கானல் மலைப்பாதையில் சரிந்து விழுந்த ராட்சத மரத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

Update: 2021-09-21 16:48 GMT
தேவதானப்பட்டி:

மலைப்பாதையில் விழுந்த மரம்

கொடைக்கானல் வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில், தேவதானப்பட்டி அருகே டம்டம்பாறை என்னுமிடத்தில் ராட்சத மரம் ஒன்று நேற்று மாலை திடீரென சரிந்து விழுந்தது. மலைப்பாதையின் குறுக்கே மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து தடை பட்டது. 

சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்தனர்.

 மேலும் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சென்றனர். பின்னர் 3 துறைகளை சேர்ந்தவர்களும் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது சிறிய அளவிலான கற்கள் பெயர்ந்து சாலையில் விழுந்தன. இதனால் பொக்லைன் எந்திரம் மூலம் அவற்றை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக பொக்லைன் எந்திரம், கொடைக்கானல் மலைப்பாதை நோக்கி வந்தது. 

வனத்துறையினர் கெடுபிடி

அதேநேரத்தில், கொடைக்கானல் மலைப்பகுதியில் பொக்லைன் எந்திரத்தை இயக்க அனுமதி இல்லை. இதனால் அந்த பொக்லைன் எந்திரத்தை, மலையடிவாரத்தில் உள்ள காமக்காபட்டி வனத்துறை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தினர். 2 மணி நேரத்துக்கும் மேலாக அங்கேயே பொக்லைன் எந்திரம் நிறுத்தப்பட்டது. 

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் எடுத்துக்கூறியும் பொக்லைன் எந்திரத்தை வனத்துறையினர் அனுப்பவில்லை.

சோதனைச்சாவடியில் வனத்துறையினர் காட்டிய கெடுபிடியால், அரை மணிநேரத்துக்குள் முடிய வேண்டிய சீரமைப்பு பணி 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. 

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டனர். 

இனிவரும் நாட்களில் இதுபோன்ற இயற்கை பேரிடர் காலத்தில், பொக்லைன் எந்திரத்தை சீரமைப்பு பணி மேற்கொள்ள வனத்துறையினர் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்