சமூக நலத்துறை அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சமூக நலத்துறை அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு, நுழைவு வாயிலை இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, செப்.
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சமூக நலத்துறை அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு, நுழைவு வாயிலை இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டம்
புதுச்சேரி ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு பின்புறம் சமூக நலத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும் முகாம் மற்றும் ஏற்கனவே உள்ள மருத்துவ சான்றிதழ்களை புதுப்பிக்கும் முகாம் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது.
இந்த முகாம் வருகிற 24&ந் தேதி வரை நடக்கிறது. இதில் புதுச்சேரி முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 3 சக்கர வாகனங்களில் அமர்ந்து சமூக நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் அலுவலக நுழைவு வாயிலை இழுத்து மூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்தவுடன் ரெட்டியார்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று போராராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. பின்னர் சமூக நலத்துறை இயக்குனர் பத்மாவதி வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இன்று (புதன்கிழமை) துறை அமைச்சரிடம் அழைத்து செல்வதாகவும், அவரிடம் உங்களது கோரிக்கைகளை கூறுமாறு தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.